
நீரின்றி அமையாது உலகுஎனில் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
When water fails, functions of nature cease, you say,
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered Way’
(Thiruvalluvar 30 BC)
If it be said that the duties of life cannot be discharged by
Any person without water, so without rain there cannot be
flowing water.
நீரின்றி இந்த உலகம் எப்படியிருக்கும் என
எண்ணியிருப்போமா?இவ்வுலகம் செவ்வாய்க்கிரகம்
(Mars) போலிருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்ததாக நீரே மிகத்
தேவையானது,அனைத்து ஜீவராசிகளுக்கும்
மிக இன்றியமையாதது.
பூமியின் 70 சதவிகித மேல்பரப்பு கடல்நீரினால்
மூடப்பட்டுள்ளது, பூமியிலுள்ள 97 சதவிகித நீர்
உப்புநீராகும் 2 சதவிகித நீர் பனிக்கட்டி
வடிவிலுள்ளது, பூமியிலுள்ள மிகுதி 1 சதவிகித
நீரே மனித இனம் பருகுவதற்கும் எனைய
தேவைகளுக்குமாக உபயோகப்படுகின்றது.
ஒரு மனிதனின் உடல் 60-70 சதவிகிதம் நீராலானது.
இரத்தம்,தசை, ஈரல், நுரையிரல், மூளை
என்பன அதிகளவு நீரைக் கொண்டிருக்கின்றன.
எமது உடலின் செயல்பாட்டிற்க்கு,வெப்பத்திற்க்கு,
உணவுச்சத்தை உடலின் ஆர்கன்களுக்கு (Organ)
கொண்டுசெல்வதற்கு, ஆக்சிஜனை (Oxygen)
உயிரணுக்களுக்கு (Cells)காவிச்செல்வதற்கு,
உடல் கழிவுகளை வெளியேற்ற,மூட்டுக்களை
பாதுகாக்க என அனைத்திற்கும் நீர் மூலாதாரமாய்
மனித உடலில் செயல்படுகிறது.
இவ்வருடம் ஐக்கிய நாடுகள் மன்றம் அனைத்து
மக்களும் குடிநீரும் சுகாதார வசதியும்
பெறுவதை அடிப்படை மனித உரிமை என
பிரகடன்ப்படுத்தியுள்ளது. பல நாடுகள் நீர்
மனிதனின் உரிமையா? அல்லது தேவையா?
என்ற சர்ச்சையில் இப்பிரகடனத்திற்கு எதிராக
வாக்களித்ததும் சில நாடுகள் நடுநிலை
வகித்ததுவும் நடந்துள்ளது.
அறிவியளாலர்களும் ஆர்வலர்களும் உலக
சனத்தொகை 2030 ல் 8.5 பில்லியனாக
உயரப்போவதாகவும், அதன் தேவையை
பூர்த்தி செய்யத் தேவையான நீர் இல்லாமல்,
பற்றாக்குறை நிலவும் எனவும்,
எரிபொருளுக்கு நிகரான தேவை, அதன்
காரணமாய் விலையுயர்வு என்பன நிலவும்
எனவும் கூறுகிறார்கள்.முறையான திட்டங்கள்
செயற்முறைகள் என்பன இல்லாமையால்
இந்தியா 2020 ல் மிகக் கடுமையான
நீர்த் தட்டுப்பாட்டை சந்திக்கும் எனவும்
ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒரு சாரார், மனிதனின் கட்டுப்பாட்டை மீறிச்செல்லும்
இப்பிரச்சினையை : சரியான திட்டங்கள், கட்டுப்பாடு ,
அனைத்து நாடுகள் அதன் மக்கள் பல்தேசிய
நிறுவனங்கள் என்பனவற்றின் புரிந்துணர்வு,
ஒத்துழைப்பு என்பன, ஓரளவு நிவர்த்திக்க
உதவும் என்கிறார்கள்.
முன்னேற்றமடைந்த நாடுகளில் வாழும் ஓர் மனிதன்
சராசரி ஓர் நாளில் 470 லீட்டர் நீரைப் பயன் படுத்துவதாக
ஆய்வுகள் கூறுகின்றன.
இது உலகின் பிரச்சினை என்றிருக்காமல், ஒவ்வொரு
தனி மனிதனும் இதில் பங்குகொள்ள
வேண்டும் என்பது ஆர்வலர்களின் அறைகூவல்.
